"திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று பெரியோர்கள் சொல்வார்கள். இன்றைய கால கட்டத்தில் திருமண வாழ்க்கை சிலருக்கு சரியாக அமைவதில்லை என்கிற குறை இருக்கிறது. காரணம் தம்பதியர்களிடம் ஏற்படும் ஆணவம், சுயநலம், நம்பிக்கையற்ற வாழ்க்கை முறை என பல காரணங்கள் கூறினாலும் இவற்றை எல்லாம் தீர்க்கவல்ல ஒரே கடவுள் ஸ்ரீ நீல சரஸ்வதி (நீலவாணி)யுடன் இணைந்து இருக்கும் ஸ்ரீ உச்சிஷ்ட மகாகணபதி என்கிற முழு முதற் கடவுள்தான்.
ஞான வடிவாக அக்னியிலிருந்து தோன்றிய உச்சிஷ்ட மகாகணபதி கம் எனும் பீஜ வடிவமும், ஓம் எனும் பிரணவ மந்திரத்தில் விளங்குபவராகவும் உள்ளார். கணவன்- மனைவிக்குள் இருக்கும். மன வேறுபாட்டையும், பூசலையும் களைக்கும் சக்தியுடைய உச்சிஷ்ட மகாகணபதியை மனதார வழிபட்டால் நிச்சயம் பலன் உண்டு. அதேபோன்று திருமணத்தடை நீக்கி விரைவில் திருமணம் நடக்கவும் இந்த கணபதியை வழிபட்டால் பலனுண்டு.
காணபத்யம் என்பது கணபதி வழிபாடு முறை. இந்த சமய வழிபாடு என்பது ஸ்ரீ ஆதிசங்கரர் ஏற்படுத்திய ஷண்மதங்களில் ஒன்றா கும். கணபதியின் 32 வடிவ உருவங்களில் உச்சிஷ்ட மகாகணபதி வடிவம் தனிச்சிறப்பு கொண்டது. தந்திர சாஸ்திர வழி பாட்டில் முதல் வழிபாடே உச்சிஷ்ட கணபதி வழிபாடுதான். பொதுவாக கணபதி என்றாலே பிரம்மச்சாரி வடிவம்தான் நம் நினைவுக்கு முடிவில் வரும். ஆனால் உச்சிஷ்ட மகாகணபதி வடிவம் சற்று மாறுபட்ட வடிவம். உச்சிஷ்ட மகாகணபதியானவர் அமர்ந்த கோலத்தில் தன்னுடைய தேவியான நீல சரஸ்வதியை (நீலசரஸ்வதி என்பது மாயா ஸ்வரூபி, பிரம்மாவின் மனைவியை சரஸ்வதி தேவி என்பது வேறு) ஒரு கையால் அனைத்துக்கொண்டு இருப்பார்.
இந்தியாவிலேயே ராஜகோபுரத் துடன், எட்டு நிலை மண்டபத்துடன், மூன்று பிராகாரங்களில் கொடி மரத்துடன் காட்சிதரும் தனிப்பெரும் பழமையான கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங் கரை, அருகே மணிமூர்த்திஸ்வரம் எனும் இடத்தில் உள்ளது. அருள்மிகு ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி திருக்கோவில் மூலவராக உச்சிஷ்ட மகாகணபதி பக்தர்களுக்கு அருள் பாலித்துவருகிறார். இக்கோவில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோவிலின் மற்றொரு தனிச்சிறப்பு சித்திரை மாதம் முதல்நாளில் சூரிய ஒளியானது மூலவர்மீது படும். இந்த நிகழ்வானது சூரிய பகவான் உச்சிஷ்டமகா கணபதியை வணங்குவதற்கு ஒப்பாகும்.
கோவிலின் தலபுராணப்படி முற்காலத்தில் வித்யாகரன் எனும் அசுரன் பிரம்மாவிடம் தந்திரமாகவும், ஓர் புதுமையான வரத்தைப் பெற்று பொதுமக்களையும், தேவர்களையும் மிகவும் கொடுமை செய்துவந்தான். இந்த அசுரனை வதம் செய்யவே யாக குண்டத்திலிருந்து கணபதியானவர் உச்சிஷ்ட கணபதி எனும் வடிவத்தை எடுத்தார். நான்கு கரங்களுடன் அவதாரம் எடுத்த கணபதி அசுரனை வதம் செய்தபின்பு இத்தலத்தில் யோக தத்துவத்தில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறார்.
நாம் எடுத்த காரியத்தில் தங்கு தடையின்றி நல்லமுறையில் முடிய உச்சிஷ்ட மகா கணபதி உபாஸனை மிகவும் முக்கியமாகச் சொல்லப்படுகிறது. கணபதி மந்திரத்தை தியானிக்கும் முறை, பூஜை செய்யும் முறைகளைப் பற்றி சென்னை மடிப்பாக்கத்தில் வகிக்கும் உச்சிஷ்ட மகாகணபதி மற்றும் ஸ்ரீ வித்யா உபாசகரான திருவெண்காடு ஸ்ரீ எம். கார்த்திகேயன் சாஸ்திரி (செல்: 98403 12334) நம்மிடையே சொல்லும்போது-
நம்முடைய சனாதன தர்மத்தில் வேராக விளங்கும் வேதத்தில் கணபதியை துதிக்கும்போது "கணானந் த்வா கணபதிம் ஹவாமஹே' என்று தொடங்கும் மந்திரத்தை சொல்லித்தான் தொடங்குவோம். இதில் கணா என்றால் ஓர் கூட்டம் அல்லது குழு எனச் சொல்லலாம். இப்படி நம்முடைய மனித "கூட்டுமல்லாமல் தேவர்களின் கூட்டத்திற்கும் தலைவனாக விளங்குபவர். இவரை துதித்துவிட்டுதான் எந்த ஒரு காரியத்தையும் முதலில் துவங்க வேண்டும். அப்போதுதான் தடைகள் எதுவும் வராது. உச்சிஷ்ட மகாகணபதியை துதிக்க மூலமந்திரத்தை முறையாக குருவின்மூலம் நேரில் உபதேசம் பெற்று, சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட வண்ணம் பக்தியுடன் தினமும் தியானிக்க (ஜெபம்)வேண்டும்.
"ஓம் ஹ்ரீம் கம்'
ஹஸ்தி பிசாசி-கே ஸ்வாஹா' என்பது சிறிய வடிவான எளிதான மூலமந்திரம். இதுவே வேதத்தின்படி,
"ஓம் நமோபகவதே ஏகதம் ஷ்ட்ராய
ஹஸ்தி முகாய லெம்போதராய உச்சிஷ்ட
மகாத்மனே ஆம்ச்ரோம் ஹ்ரீம்கம்
கேகே ஸ்வாஹா''
என்பது மூலமந்திரம்.
இந்த மூல மந்திரத்தை பிரம்மச்சாரிகள் செய்யக்கூடாது. திருமணம் ஆனவர்கள். ஆண்- பெண், சாதி குலம் என்கிற எந்தவித பாகுபாடுயின்றி எல்லாரும் பக்தியுடன் ஜெபிக்கலாம். உச்சிஷ்ட மகாகணபதி மந்திரம் (முக்கியமாக தம்பதியர்களுக்கு உரியது. ஸ்திரி, புருஷ ஸம்போகத்தைக் குறிக்கும்வண்ணம் உச்சிஷ்ட மகா கணபதியின் அவதாரம் இருப்பதால் இது மறை பொருளான (ரகசியம்) வடிவம் என்றே சொல்லலாம்.இந்த உபாசனைமூலம் நீங்கள் நினைத்த காரியத்தை நிச்சயம் சாதிக்கலாம். பூஜை செய்யும் முறையும் மிக எளிது. மனதளவில் பக்தியும், நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே போதுமானது. பெரியளவில் ஆசாரம், அனுஷ்டானங்கள் ஒன்றும் இல்லை' என தெரிவித்தார்.
திருமணத்தடையை நீக்கவும், இல்லற வாழ்வில் மனநிம்மதி ஏற்படவும், கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் (நெருக்கம்) ஏற்படவும். உச்சிஷ்ட மகாகணபதியை வழிபடுவது மிகவும் முக்கியம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/30/pillaiyar-2026-01-30-13-05-55.jpg)